“பேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்” என்றார் மகாகவி பாரதி. மதவெறி எனும் பேய் ஆட்சிக்கு வந்தால் சட்டங்களை யும், சாத்திரங்களையும் துணைக்கு வைத்துக் கொண்டு எத்தகைய கொலைபாதகச் செயல் களில் ஈடுபடும் என்பதற்கு, நிகழ்கால சாட்சிய மாக குஜராத்தில் நடைபெறும் நரேந்திர மோடி யின் ஆட்சி அமைந்துள்ளது.
“மோடியைக் கொல்ல சதி; முஸ்லிம் தீவிர வாதிகள் சுட்டுக்கொலை” என்று அவ்வப்போது ஊடகங்களில் செய்தி ஊதிவிடப்படும். இத்த கைய செய்திகளுக்குப் பின்னால் எத்தகைய சதி வலைகள் பின்னப்பட்டன என்பது குறித்த தக வல்கள் இப்போது மெல்ல மெல்லக் கசிகின்றன.
சோராபுதீன் ஷேக் என்பவர் இவ்வாறு பயங்கரவாதி என்று முத்திரை குத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். போலீசாரின் போலி என்கவுண்ட்டர் நாடகத்தில்தான் அவரது உயிர் பறிக்கப்பட்டது என்ற உண்மை வெளிவந் தது. இதன் உஷ்ணம் அடங்குவதற்கு முன்பே, இஷ் ரத் ஜஹான் என்ற 19 வயது பெண் உட்பட நான்குபேர் சுட்டுக்கொல்லப்பட்டதும் போலி என்கவுண்ட்டர் சதியில்தான் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
என்கவுண்ட்டர் புகழ் என்று மோடி அரசாங்கத் தால் புகழ்ந்துரைக்கப்பட்ட வன்ஜரா உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள்தான் இந்த என்கவுண்டர் சதியை அரங்கேற்றினர் என்று நீதிமன்ற ஆணையின்பேரில் நடத்தப்பட்ட விசாரணை யில் தெரியவந்துள்ளது. நரேந்திரமோடியிடமிருந்து நற்சான்றிதழ் பெறுவதற்காகவும், இதைக் கார ணம் காட்டி, பதவி உயர்வு பெறுவதற்காகவும் இத்தகைய படுகொலைகள் நடத்தப்பட்டுள் ளன என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.
குஜராத் போலீசாரால் கடத்திக்கொண்டுவரப் பட்டு, காவல்நிலையத்திலேயே சுட்டுக்கொன்று விட்டு, பயங்கரவாதிகள் தப்பிஓட முயன்றபோது கொல்லப்பட்டதாக செய்தி பரப்பப்பட் டுள்ளது. ஏற்கெனவே இறந்து பிணமானவர்கள் மீது துப்பாக்கிக்குண்டுகள் பாய்ச்சப்பட்டுள்ளன.
குஜராத்தில் அப்பாவி சிறுபான்மை மக்கள் கொன்றுகுவிக்கப்பட்டதை ஊக்குவித்தவர்தான் நரேந்திரமோடி. பாதிக்கப்பட்டவர்களுக்கு நியா யம் கிடைக்கக்கூட, ஒவ்வொரு நிலையிலும் மனித உரிமை அமைப்புகளும் நீதிமன்றமும் தலையிட வேண்டியிருந்தது. உண்மையை மூடி மறைக்க மாநில அரசு அனைத்து முயற்சிகளை யும் மேற்கொண்டது மட்டுமின்றி, மனித இனமே வெட்கித் தலைகுனியும் வகையில் நிகழ்த்தப் பட்ட படுகொலைகளை நியாயப்படுத்தவும் மோடி அரசாங்கம் துணை நின்றுள்ளது என்பதையே வெளிவரும் தகவல்கள் உறுதி செய்கின்றன.
இத்தகைய பஞ்சமா பாதகங்களுக்கு தலை மை தாங்கிய, தலைமை தாங்கிக்கொண்டிருக் கிற மோடியைத்தான் அடுத்த பிரதமராக கொண்டுவரவேண்டும் என டாடா உள்ளிட்ட இந்திய பெருமுதலாளிகள் முன்மொழிந்தனர் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
பாஜகவுக்குள் அதிகாரப்போட்டியும் கோஷ் டிப்பூசலும் ஆர்எஸ்எஸ் தலையீடும் உச்சகட் டத்தில் இருந்தாலும், மதவெறி கொள்கைகளை, கொலைகளை முன்னெடுத்துச்செல்வதில் அவர் களுக்குள் அபூர்வமான ஒற்றுமை நிலவுகிறது. விஷத்தின் வீரியம் கொஞ்சம்கூட குறையவில்லை.
மோடி இனி ஒருநிமிடம் கூட பதவியில் தொடர அருகதையற்றவர். அவர் ராஜினாமா செய்வதே குறைந்தபட்ச நாகரிகமாக இருக்கும்.
நன்றி
தீக்கதிர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக