ஒவ்வொரு புத்தாண்டையும் வாழ்த்தி வரவேற்கும்போது, சென்ற ஆண்டின் வரவு - செலவை கணக்குப் பார்ப்பது மனித இயல்பு. கடந்த ஆண்டின் துன்பங்களும், சோதனை களும் வரும் ஆண்டில் தொடரக் கூடாது என்பது ஒவ்வொருவரின் விருப்பம். நாமும் புத்தாண்டை வரவேற்போம். சோஷலிச கியூபா 50வது ஆண்டிலும், சீனா 60வது ஆண்டிலும் அடியெடுத்து வைக்கும் தருணத்தில் ஆங்கிலப் புத்தாண்டு நம்பிக்கையோடும், புதிய சவால் களோடும் பிறந்திருக்கிறது.
கடந்த ஆண்டு உலகம் பல நெருக்கடிகளை சந்தித்தது. ஏகாதிபத்தியம் வழக்கம்போல் தன் னுடைய கை வரிசையை உலகெங்கும் காட்டிக் கொண்டிருந்தது. சிரியாவும், லெபனானும், வேறு பல நாடுகளும் அதன் கசப்பை அனுபவித்தன. ஈரானையும், வடகொரியாவையும் ஏகாதிபத்தியம் மிரட்டிக் கொண்டிருந்தது. மறுபக்கம் உலகமயம், தாராளமயம், தனியார்மயம் என்ற சீரழிவுப் பாதை யின் மரணச் சறுக்கு கடந்த ஆண்டு துவங்கி விட்டது. மீண்டும் ஒரு முறை முதலாளித்துவ நாடுகள் மிகப்பெரிய நிதி நெருக்கடியில் சிக்கிக் கொண்டது. 1929ம் ஆண்டு பொருளாதார மந்தத் திற்கு பிறகு ஏற்பட்ட மிகப்பெரிய சிக்கலென வல்லு நர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். வரும் மாதங்க ளில் இதன் தாக்கம் மிகக் கடுமையாக இருக்கும் என நிபுணர்கள் அபாயச் சங்கு ஊதுகின்றனர்.
ஆக, புத்தாண்டு மிகப்பெரிய நிதி நெருக்கடி சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய கட் டாயத்தோடு விடிகிறது. முதலாளித்துவம்தான் இறுதியானது என்ற இறுமாப்பு தகர்ந்துவிட்டது. இனியும் அந்தப் பாதையில் பயணிப்பது மீள முடி யாத புதை சகதியில்தான் மனித குலத்தை தள் ளும் என்பது சர்வநிச்சயமாகிவிட்டது. இதிலிருந்து விடுபட இடதுசாரிகள் கூறுகிற பாதை தான் மாற்று.
கடந்த நூற்றாண்டு என்பது அமெரிக்கா வுக்கும் - ஐரோப்பாவுக்கும் உரியதாக இருந்தது. ஆனால் இந்த நூற்றாண்டு லத்தீன் அமெரிக்க, ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளுக்கு உரியது என வெனிசுலா அதிபர் சாவேஸ் பிரகடனம் செய் துள்ளது நூற்றுக்கு நூறு உண்மை என்பதை பறைசாற்றியவாறே விடிகிறது புத்தாண்டு.
பயங்கரவாதத்திற்கு மதமும் இல்லை, இலக்கும் இல்லை. பைத்தியக்காரத்தனம். அது இன்று உலகை மிரட்டிக் கொண்டிருக்கிறது. இந் தியாவும் பயங்கரவாதத்தின் வலியை கடுமையா கவே அனுபவித்து விட்டது. மதவெறியும், பயங் கரவாதமும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் தான். இரண்டையும் ஒரு சேர எதிர்க்க வேண் டும் என்கிற வியூகத்தோடு புத்தாண்டில் உறுதி யேற்போம்.
பக்கத்து நாடான இலங்கையில் யுத்தத்தை கைவிட்டு பேச்சுவார்த்தை மூலம் தமிழர் துயரத்துக்கு இந்த ஆண்டாவது விடிவு கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்போம்.
நமது நாடு இந்த ஆண்டு பொதுத்தேர்தலை சந்திக்க உள்ளது. அமெரிக்காவோடு அடிமை ஒப்பந்தம் போட்டும், தவறான பொருளாதாரக் கொள்கைகளில் பயணித்தும், முட்டுச்சந்தில் தேசத்தை தள்ளியிருக்கிற காங்கிரஸ் கட்சியை நிராகரிப்பதும், மதவெறி கொண்ட பாஜகவை தோற்கடிப்பதும்தான் புத்தாண்டின் முழு அர்த்தமாக இருக்கும். அதோடு மாற்றுக் கொள் கையோடு மக்கள் நல்வாழ்விற்காக மூன்றாவது அணி ஒன்று அமைய வேண்டும். அதுதான் விடியலின் வெளிச்சக் கீற்றுகளை குடிசைக்கும் கொண்டு வரும். அதற்காக புத்தாண்டில் சபதம் எடுப்போம், செய்து முடிப்போம்.